அதர்மம் தோற்க வேண்டும்: ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

அதர்மம் தோற்க வேண்டும்: ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

சனி, மே 07,2016,

சட்டப் பேரவைத் தேர்தலில், அதர்மமும், சந்தர்ப்பவாதமும், நாடகமும் தோற்க வேண்டும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறினார்.
 ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் அவர், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர் எழில் நகர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.
 அப்போது அவர் பேசியது:
 2015ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்தீர்கள். இந்தத் தொகுதி மக்கள் எனது நெஞ்சில் நீங்காத இடம்பெற்றுள்ளீர்கள். இப்போதைய தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் பெருமழை கடந்த ஆண்டு கொட்டித் தீர்த்தது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்தத் தொகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. ஆர்.கே.நகரில் பாதிக்கப்பட்ட 97,411 குடும்பங்களுக்கு ரூ.48 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
 அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லாமல் இணையதள இணைப்பு வசதியும் வழங்கப்படும்.
 மகப்பேறு நிதியுதவி ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் இல்லை. அரசு கேபிள் தொலைக்காட்சி இணைப்பு பெற்றோருக்கு செட்-டாப் பாக்ஸ் விலையில்லாமல் அளிக்கப்படும். பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆட்டோக்கள் வாங்க மானியம் கொடுக்கப்படும்.
 மக்கள்தான் என் மூச்சு: மக்களால் நான், மக்களுக்காகவே நான், உங்களால் நான், உங்களுக்காகவே நான். என் மீது உங்களுக்கு நம்பிக்கை. உங்கள் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை. தர்மம் வெல்ல, அதர்மம் தோற்க, சத்தியம் வெல்ல, சந்தர்ப்பவாதம் தோற்க, நாடு வளம் பெற, நயவஞ்சகக் கூட்டம் அழிந்திட, நம்பிக்கை வெற்றி பெற, நாடகம் தோற்க மகத்தான வெற்றியை வழங்க வேண்டும்.
 மக்கள் தான் என் மூச்சுக் காற்று. உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்றார் முதல்வர் ஜெயலலிதா.