அதிக தானிய மகசூல் செய்த பெண் விவசாயிக்கு சிறப்பு விருது: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

அதிக தானிய மகசூல் செய்த பெண் விவசாயிக்கு சிறப்பு விருது: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

புதன், ஜனவரி 27,2016,

குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னை கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், அதிக தானிய மகசூல் செய்த பெண் விவசாயி ப.பிரசன்னாவுக்கு சிறப்பு விருதினை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

மதுரை மாவட்டம் திருப்பாலையைச் சேர்ந்த பிரசன்னா, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப முறையை கடந்த பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார்.

டிஆர்ஒய் 3 ரக விதையை தஞ்சாவூரில் வேளாண்மைத் துறையிடம் இருந்து பெற்று, புதிய தொழில்நுட்ப ஆலோசனைகளைக் கடைப்பிடித்தார். 68 சென்ட் நிலத்துக்கு 2 கிலோ நெல் விதைகளைப் பயன்படுத்தி சாகுபடி செய்துள்ளார். நடவு வயலில் ஆட்டுக்கிடை வைத்தும், தக்கை பூண்டு விதைகளை விதைத்து மடக்கி உழுதும், தொழு உரத்தை பயன்படுத்தி உள்ளார்.

இதனால் அரை ஏக்கருக்கு 3,223 கிலோ தானிய மகசூலும், ஹெக்டேருக்கு 16,115 கிலோ தானிய மகசூலும் செய்துள்ளார். இது மாநிலத்திலேயே அதிக விளைச்சலாகும். இதையடுத்து, அவருக்கு முதல்வரின் சிறப்பு விருது அளிக்கப்பட்டது. ரூ.5 லட்சம் காசோலையும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் இந்த விருது கொண்டது.