அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் இரங்கல்

அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் இரங்கல்

திங்கள் , நவம்பர் 14,2016,

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் மனைவியுமான விசாலாட்சி நெடுஞ்செழியன் இறப்புக்கு, முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளதாக விசாலாட்சி அவர்களின் மகன் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன், சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.இந்நிலையில் அவர் இன்று காலமானார். 

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு பெரும் துயரமடைந்தேன். கட்சி மீதும் கட்சி தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த விசாலாட்சி நெடுஞ்செழியனின் இழப்பு அ.தி.மு.க.வுக்கு ஈடு செய்ய முடியாதது. டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது உடல் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விசாலாட்சி நெடுஞ்செழியனின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக, விசாலாட்சியின் மகன் மதிவாணன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.