அதிமுக அமோக வெற்றிக்கு பாடுபடுவேன்: எம்.பி., ப.கண்ணன் அறிவிப்பு

அதிமுக அமோக வெற்றிக்கு பாடுபடுவேன்: எம்.பி., ப.கண்ணன் அறிவிப்பு

சனி, பெப்ரவரி 20,2016,

புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற பாடுபடுவேன் என, முன்னாள் எம்.பி., ப.கண்ணன் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான ப.கண்ணன், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த 15-ஆம் தேதி அந்தக் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், அவர் உப்பளத்தில் உள்ள அதிமுக மாநில அலுவலகத்துக்கு முதல்முறையாக வெள்ளிக்கிழமை வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ப.கண்ணன் கூறியதாவது:
கடந்த ஓராண்டாக அதிமுகவில் இணைய வேண்டும் என ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது, அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளேன். தமிழகத்தைப் போல புதுவையிலும் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி. இதற்காக அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். பதவிக்காகவோ, வேறு நோக்கத்துக்காகவோ அதிமுகவில் இணையவில்லை. புதுச்சேரி மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் இணைந்துள்ளேன்.
அதிமுக அடுத்து நிச்சயம் ஆட்சி அமைக்கும். அப்போது படித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தக் கட்டமாக விரைவில் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசிய பிறகு, வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான செயல்பாடுகளை மேற்கொள்வோம் என்றார்.