அதிமுக அரசின் சாதனைகளை விளக்க பேரணி:ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன

அதிமுக அரசின் சாதனைகளை விளக்க பேரணி:ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன

ஞாயிறு, பெப்ரவரி 14,2016,

அதிமுக அரசின் ஆட்சிக் கால சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், அதிமுக அரசின் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை புத்தகமாக அச்சிட்டு, அதை மக்களிடையே சேர்க்கும் விழிப்புணர்வுப் பேணி திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பேரவைச் செயலாளர் இரா.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை, பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

திருவள்ளூர் வடக்குராஜ வீதியில் தொடங்கிய இப்பேரணி, பஜார்வீதி, குளக்கரை சாலை, காமராஜர் சிலை, ராஜாஜி சாலை வழியாக தேரடியை வந்தடைந்தது. நகர கூட்டுறவு வங்கி தலைவர் எழிலரசன் நன்றி கூறினார்.

தண்ணீர்குளத்தில்: தண்ணீர்குளம் ஊராட்சியில் அதிமுக தொகுதிச் செயலாளர் ஏழுமலை தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா, பூந்தமல்லி எம்எல்ஏ மணிமாறன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ப.ரவிசந்திரன் ஆகியோர் பங்கேற்று, 568 பேருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் புட்லூர் ஆர்.சந்திரசேகர், ஊராட்சி செயலாளர் முரளி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில்…

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிப்பட்டு ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், 2,068 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாள் விழா, பள்ளிப்பட்டு ஒன்றிய அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒன்றியச் செயலாளர் டிடி.சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் சாந்திபிரியா சுரேஷ் வரவேற்றார்.

கீச்சல், நெடுங்கல், கொல்லாலகுப்பம், புண்ணியம், கேசவராஜகுப்பம், கரிம்பேடு, சாமந்தவாடா, நெடியம், ராமசந்திராபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற முதல்வர் பிறந்த நாள் விழாவில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான பி.வி.ரமணா, எம்.பி. கோ.அரி ஆகியோர் கலந்துகொண்டு 2,068 பேருக்கு வேட்டி, சேலை, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

திருத்தணி எம்எல்ஏ மு.அருண்சுப்பிரமணியன், திருத்தணி நகர்மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கோ.குமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஜெயவேலு உள்பட பலர் இந்த விழாக்களில் கலந்துகொண்டனர்.

செங்குன்றத்தில் பேரணி

அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யும் பேரணி, சனிக்கிழமை காலை செங்குன்றத்தில் நடைபெற்றது.

வடசென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முஹமது இம்தியாஸ் ஏற்பாட்டில், 72-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.சிவகுமார் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் வி.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அரசின் சாதனை விளக்கும் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்யும் பேரணியைத் தொடக்கி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஜி.வெங்கேடஷ்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் வ.நீலகண்டன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.