அதிமுக ஆட்சி மன்ற குழு தலைவர் மதுசூதனன் : ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு

அதிமுக ஆட்சி மன்ற குழு தலைவர் மதுசூதனன் :  ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு

ஞாயிறு, மார்ச் 12, 2017,

சென்னை : அதிமுக ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், மைத்ரேயன், செம்மலை, பாண்டியராஜன், மனோ ரஞ்சிதம், மாணிக்கம் உள்ளிட்டோர் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சிமன்றக் குழுவுக்கான அறிவிப்பை மதுசூதனன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
கட்சியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. தற்போது பொதுச் செயலாளர் பணியிடம் காலியாக இருக்கும் நிலையில், ஏற்கெனவே கட்சியின் பொதுக் குழுவால் அவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நான், ஆட்சிமன்றக் குழுவின் தலைவராக இருந்து குழுவின் நிர்வாகிகளையும் இப்போது நியமித்திருக்கிறேன் என்றார்.

அதன்படி, ஆட்சிக் மன்றக் குழுவின் உறுப்பினர்களாக ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், மைத்ரேயன், செம்மலை, பாண்டியராஜன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாணிக்கம், நீலாங்கரை எம்.சி முனுசாமி, கோபாலகிருஷ்ணன், மருதராஜ், ஜெயசிங், செங்குட்டுவன், ஷேக் அயூப் ஆகிய 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி மன்றக் குழு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்யும்.