அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இரும்புக் கோட்டை:அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இரும்புக் கோட்டை:அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

புதன், பெப்ரவரி 10,2016,

அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இரும்புக் கோட்டை என்றும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி மாவட்டம், போடியில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட இளைஞர், இளம்பெண் பாசறை சார்பில் 9-ம் ஆண்டு பாசறை எழுச்சி தினப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியது: ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இரும்புக் கோட்டையாக அதிமுக திகழ்கிறது. அதனை உடைக்க முடியாது. காவிரி, பெரியாறு அணை பிரச்சினைகளில் வாய்மூடி மவுனியாக இருந்த திமுக தற்போது ஆட்சிக் கட்டிலில் ஏற வேண்டும் என்ற பேராசையுடன் துடிக்கிறது. தமிழக முதல்வர் அறிவாற்றல் திறமையால் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

முன்னதாக இளைஞர், இளம் பெண் பாசறை மாவட்ட செயலர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேசியது: திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் வந்த அதிமுக அரசு மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு வந்து மக்கள் நல அரசாக செயல்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி இந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய வாக்காளர்களில் 40 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

மாவட்ட செயலர் டி.டி.சிவக்குமார், ஆர்.பார்த்திபன் எம்.பி., ஒன்றியச் செயலர் ஆர்.டி.கணேசன், நகர செயலர் ஏ.சி.பாலமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.