அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம் : சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம் : சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சனி, பிப்ரவரி 18, 2017,

சென்னை :அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வுக்கு எதிராக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் குழுவினர் அளித்துள்ள மனுவுக்கு வரும் 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று வி.கே.சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நேற்று  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் தலைமையில் அதிமுக (ஓ.பன்னீர்செல்வம் அணி) எம்.பி.க்கள் 11 பேர் புகார் மனு அளித்தனர். மொத்தம் 42 பக்கங்கள் அடங்கிய அந்த மனுவில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட நடவடிக்கை கட்சி விதிகளுக்கு எதிரானது; பொதுக்குழு தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட அவரது நியமனம் செல்லாது; பொதுச் செயலாளரை கட்சியின் அடிமட்டத் தொண்டர்களாகிய உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய முடியும்; கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் போன்றவற்றை மட்டும்தான் அதிமுக பொதுக் குழுவால் தீர்மானிக்க முடியும்; கட்சியின் 30(5) விதியின்படி அடிப்படை உறுப்பினர் பதவியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்த ஒருவரால் மட்டும்தான் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். அந்த வகையில், கட்சியில் இருந்து 2011, டிசம்பர் 19-ஆம் தேதி நீக்கப்பட்ட சசிகலா, அடுத்த ஆண்டில்தான் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆகவே, கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை தேர்வு செய்த நடவடிக்கை செல்லாது. எனவே, சசிகலா தலைமையிலான அதிமுகவை அங்கீகரிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை நேற்று  வெள்ளிக்கிழமை பரிசீலித்த தேர்தல் ஆணையம், இது தொடர்பாக வரும் 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், “ஆணையம் அளித்துள்ள கால அவகாசத்துக்குள் பதில் அளிக்கத் தவறினால், பதில் கூற ஏதுமில்லை என்று நீங்கள் கூறியதாகக் கருதி உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சசிகலா புதன்கிழமை ஆஜராகி, பின்னர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைக் கருத்தில் கொண்டு சசிகலாவுக்கான நோட்டீஸை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை தபால் மூலமாகவும், சிறைத் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.