அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை : ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை : ஓ.பன்னீர்செல்வம்

புதன்கிழமை, பிப்ரவரி 08 , 2017, 

சென்னை ; அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.உங்களை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார்களே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்” என்று அதிரடியாக கூறினார்.

இதனையடுத்து கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், “கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை. கட்சிக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசியாக இருக்கிறேன். பின்னணியில் இருந்து என்னை யாரும் இயக்கவில்லை.மறைந்த தலைவர் ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது இந்த பொருளாளர் பதவி. ஜெயலலிதா என்னை புகழும் அளவுக்கு மன நிறைவுடன் பணியாற்றி உள்ளேன் என்றும் அவர் கூறினார்.சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலிடனும் சிரித்து பேசியதாக சசிகலா குற்றம்சாட்டியதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசமே சிரிப்பில்தான் உள்ளது. சிரிப்பது ஒரு தவறல்ல. என் மடியில் கனம் இல்லை. அதனால் எனக்கு பயம் இல்லை என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.