அத்திக்கடவு – அவினாசி குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

அத்திக்கடவு – அவினாசி குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

புதன், பெப்ரவரி 17,2016,

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ரூ.1,862 கோடியில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2011-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறையின் 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், ஏனைய 538 நீர்நிலைகளில் நிரப்புவதற்கு இந்தத் திட்டம் வகை செய்கிறது.
இதைத் தொடர்ந்து நிதியுதவி கோரி மத்திய அரசுக்கு இந்தத் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குடிநீர் வழங்கல் திட்டமாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மத்திய அரசுக்கு திருத்திய திட்ட அறிக்கை உடனடியாக அனுப்பப்படும். அதே நேரத்தில் இந்தத் திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.