அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டார் : போராட்டங்கள் வாபஸ்

அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டார் : போராட்டங்கள் வாபஸ்

சனி, பெப்ரவரி 20,2016,

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்குத் தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியதையடுத்து, 12 நாள்களாக நடைபெற்று வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் முடித்துக் கொள்ளப்பட்டன.
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி, அவிநாசியில் 14 பேர் கடந்த 8-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு ஆதரவாக குன்னத்தூர், பெருமாநல்லூர், சேவூர் பகுதிகளில் மொத்தம் 54 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
12-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், பொதுமக்கள் கருவலூர் மாரியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்து, உண்ணாவிரதப் பந்தலில் பங்கேற்றனர்.

நிர்வாக ஒப்புதல் வழங்கல், நிதி ஒதுக்கீடு அறிவிப்பு:

தமிழக அரசு சார்பில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், ஆய்வுப் பணி தொடங்குவதற்காக ரூ. 3.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் வெள்ளிக்கிழமை மாலை செய்தி வெளியானது. இதையறிந்த போராட்டக் குழுவினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
பிறகு, இரவு 7 மணிக்கு கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அரசு வெளியிட்ட அரசாணை நகலுடன் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தனர். அரசாணையை கோட்டாட்சியர் வாசித்தார்.
பின்னர், அரசாணை குறித்து போராட்டக் குழுவினர் கலந்தாய்வு நடத்தினர். அதன் பின்னர், பொது வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களையும் வாபஸ் பெறுவதாக இரவு 8.30 மணிக்கு அவர்கள் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் முருகேசன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.