அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்பதால், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல் : சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் மாறுதல் இல்லாத நிலையில், விலை உயர்வு நியாயமானது அல்ல என்றும் கருத்து

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்பதால், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல் : சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் மாறுதல் இல்லாத நிலையில், விலை உயர்வு நியாயமானது அல்ல என்றும் கருத்து

எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்பதால், இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் மாறுதல் ஏதும் இல்லாத நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலக சந்தையில் பெட்ரோல்-டீசல் விலை ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விலை உயர்வு நியாயமானது அல்ல என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் நிறுவனங்கள் நேற்று நள்ளிரவு முதல், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 90 காசுகள் வீதமும், பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 36 காசுகள் வீதமும் உயர்த்தியுள்ளன என்றும், உலகச் சந்தையில் தற்போது உள்ள விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான காரணங்கள் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க மாறுதல் ஏதுமில்லாத நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலக சந்தையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட இந்த விலை உயர்வு நியாயமானதல்ல – கடந்த 6-ம் தேதிமுதல், பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் வீதமும், டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 40 காசுகள் வீதமும் மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில் தற்போதைய இந்த விலை உயர்வு சரியானது அல்ல- பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கான கலால் வரியை உயர்த்தாமல் இருந்திருந்தாலே தற்போதைய இந்த விலை உயர்வு தேவையற்றதாக இருந்திருக்கும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் முதல், மத்திய அரசு ஐந்து முறை பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியுள்ளது – பெட்ரோலுக்கான கலால் வரியை 8 ரூபாய் 35 காசுகள் என்ற வீதத்திலும் டீசலுக்கான கலால் வரியை 6 ரூபாய் 90 காசுகள் என்ற வீதத்திலும் உயர்த்தி மத்திய அரசுக்கு வருவாயை ஈட்டிக்கொண்டு, சாமானிய மக்கள் மீது விலை உயர்வை சுமத்துவது நியாயமற்ற செயல் ஆகும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது அமெரிக்க டாலருக்கு ஏற்படும் தேவையைப் பொறுத்தே இந்திய ரூபாயின் மதிப்பில் மாறுதல் ஏற்படுகிறது – பெரும் தனியார் நிறுவனங்கள் கடன் திருப்பிச் செலுத்துவதாலும், இறக்குமதி அதிகரிப்பாலுமே இந்திய ரூபாயின் மதிப்பில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன – அது போலவே இந்திய கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளை திரும்பப் பெறுவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன – அன்னிய நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீட்டில் கிடைக்கக் கூடிய லாபத்தைக் கணக்கிட்டே அன்னிய செலாவணி முதலீடுகள் செய்வதும் அவற்றை திரும்ப எடுத்துக் கொள்வதும் நடைபெறும் – இதுபோன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பில் அவ்வப்போது ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயக் கொள்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றினை இறக்குமதி செய்தால் என்ன விலை என்று கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்வது சரியானதல்ல என்றும் தாம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தவறான விலை நிர்ணயக் கொள்கையை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என தாம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்றும், இதன் காரணமாக ஏழை, எளிய, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.