அந்தோணியார் திருவிழாவில் அனைத்து தமிழக மீனவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்

அந்தோணியார் திருவிழாவில் அனைத்து தமிழக மீனவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்

வெள்ளி, டிசம்பர் 09,2016,

கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

புதிதாகக் கட்டப்பட்டுள்ள அந்தோணியார் தேவாலய திருவிழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமுதாயத்தினர் பங்கேற்க அரசியல் ரீதியான அனுமதியை வழங்க வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் அறிவுறுத்தக் கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலய திருவிழா கடந்த 7-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்தத் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருந்தார்.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் குறைந்தது 100 பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமென ராமேசுவரத்திலுள்ள புனித ஜோசப் தேவாலயத்தின் பங்குத் தந்தை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்றே தலைமைச் செயலாளர் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
இந்த நிலையில், அந்தோனியார் திருவிழாவில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம் என்று கடந்த 5-ஆம் தேதியிட்ட கடிதத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதுவரை தேதி தெரிவிக்கவில்லை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, அந்தோணியார் கோயில் திருவிழாவின் தேதியை இலங்கை அரசு தள்ளிவைத்தது. ஆனால், திருவிழா நடைபெறும் மாற்றுத் தேதியை இதுவரை தமிழகத்துக்குத் தெரிவிக்கவில்லை.
புனித அந்தோணியார் தேவாலயம் என்பது தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவ பக்தர்களின் கலாசாரத்தோடும், மத ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தச் சூழ்நிலையில், அந்த தேவாலயத்தின் திருவிழாவில் பங்கேற்க 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என்பது திருவிழாவில் பங்கேற்க நினைக்கும் பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.
புனித அந்தோணியார் தேவாலயத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு முன்பாகவே, கடந்த மே 14-ஆம் தேதியன்று தங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதில், தேவாலய கட்டுமானத்தை இலங்கை-இந்திய மீனவர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்திருந்தார்.
முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத் தலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது பாரம்பரிய மற்றும் வழக்க நிகழ்வை மேற்கொள்வதில் மிகவும் கருத்தாக உள்ளனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்பது என்பது தமிழக மீனவர்களுக்கான பிரிக்க முடியாத உரிமையாகும். எனவே, புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்பதில் அவர்களுக்குள்ள உணர்வுகளை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்க எந்தவித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் இன்றி அனுமதி வழங்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.