அமராவதி அணையில் இன்று முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:54,637 ஏக்கர் நிலங்கள் தொடர்ந்து பாசன வசதி பெறும்

அமராவதி அணையில் இன்று முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:54,637 ஏக்கர் நிலங்கள் தொடர்ந்து பாசன வசதி பெறும்

சனி, ஜனவரி 09,2016,

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் கால அளவு முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பு செய்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54, 637 ஏக்கர் நிலங்கள் தொடர்ந்து பாசன வசதி பெறும்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட தாம் ஏற்கெனவே ஆணையிட்டதாகவும், அவ்வாறு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் கால அளவு முடிவதால் காலநீட்டிப்பு செய்து வழங்குமாறு இந்த மாவட்டங்களிலுள்ள வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பாசன அமைப்பின்கீழ் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு கால நீட்டிப்பு செய்து, இன்று முதல் தண்ணீர் திறந்து விட தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் தொடர்ந்து பாசன வசதி பெறும் என்பதை தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.