அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு ஆர். பி உதயகுமார் தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வுக்கூட்டம்

அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு ஆர். பி உதயகுமார் தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வுக்கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 04, 2016,

சென்னை ; வடகிழக்கு பருவமழை குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு,  ஆர்.பி. .உதயகுமார்  தலைமையில் மதுரை மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் நேற்று  நடைபெற்றது.

பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழை பொழிவினை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், முதலமைச்சர் 110-வது விதியின்கீழ் அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு,  ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில், பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர்  ஆர்.பி. .உதயகுமார் அறிவுறுத்தினார்.

குடிநீர் தங்குதடையின்றி சுகாதாரமான முறையில் கிடைக்கும் வகையில் சுகாதாரத்துறை, கொசு ஒழிப்பு உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களை தூர்வாறுவது, பாதாள சாக்கடை சீரமைப்பு, சாலை பணிகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.

தீயணைப்புத்துறையினர், மின்வாரியத்துறையினர், மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் வேளாண்துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கடனுதவிகள், உரங்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி கிடைக்க வழி செய்யுமாறும் அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட  கலெக்டர்  வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.