பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க, “அம்மா அழைப்பு மையம்” திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க, “அம்மா அழைப்பு மையம்” திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

செவ்வாய், ஜனவரி 19,2016,

பொது மக்களின் குறைகளை விரைவில் களைந்திட 24 / 7 மணிநேரம் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி (Toll Free) எண் 1100 மூலம் தொடர்பு கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள அம்மா அழைப்பு மையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்கள்.

ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் அரசிற்கு தங்கள் குறைகளைத் தெரிவித்து உரிய தீர்வு பெறும் நோக்கத்துடன் முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் வழியாகவும், முதலமைச்சரின் தனிப் பிரிவின் வலைதளம் மூலமாகவும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் குறைகளை விரைந்து பெற்று, அதனைக் களைந்திடும் நோக்கில், கணினிவழி தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல் (Computer Telephony Integration), குரல் பதிவு மற்றும் பிரித்தறிதல் Voice Logger System) போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன், 24 / 7 மணிநேரமும் செயல்படும், கட்டணமில்லா தொலைபேசி Toll Free) எண் 1100 மூலம் எங்கிருந்தும், எப்போதும் பொது மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் “அம்மா அழைப்பு மையம்” அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15,000 அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்ட இந்த மையத்தின் மூலம், பொது மக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி (SMS) வாயிலாக அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமின்றி, எந்த துறையின், எந்த அதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் அழைத்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மேலும், அவரது குறை குறித்து சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் திரு.கு. ஞானதேசிகன், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), பொதுத் துறை முதன்மைச் செயலாளர் திரு.யத்தீந்திர நாத் ஸ்வேன், இ.ஆ.ப., தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் திரு.தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப., முதலமைச்சரின் தனிப் பிரிவின் சிறப்பு பணி அலுவலர் டாக்டர் சந்தோஷ் பாபு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின் மூலம், பொதுமக்ககளின் குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.