அம்மா உணவகத்தில் உணவை ருசித்து பார்த்த மத்திய குழுவினர்; முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு பாராட்டு

அம்மா உணவகத்தில் உணவை ருசித்து பார்த்த மத்திய குழுவினர்; முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு பாராட்டு

ஞாயிறு, நவம்பர் 29,2015,

சென்னை,

தமிழக வெள்ளசேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய அரசின் உள்துறை இணைசெயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 8 பேர் கொண்ட குழு கடந்த 26-ந் தேதி டெல்லியிலிருந்து சென்னை வந்தனர். காஞ்சீபுரம், கடலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அந்த குழுவினர் இறுதி நாளான நேற்று சென்னை மாவட்டத்தில் வட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளசேத பகுதிகளை பார்வையிட்டனர்.

நேற்று காலை 9.40 மணிக்கு தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவிலுள்ள முகாமுக்கு மத்திய குழுவினர் வந்தனர். அப்போது அந்த குழுவினர் அந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களிடம் வெள்ளசேத பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர், மருத்துவ வசதி ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

அந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு அருகில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்துதான் 3 வேளையும் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே அம்மா உணவகத்துக்கு சென்ற மத்திய குழுவினர் ஆர்வத்துடன் அங்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்து அங்கிருந்த அதிகாரிகளிடம் உணவு நன்றாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலவேம்பு குடிநீர் குறித்தும் அவர் கேட்டறிந்தார். டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலுக்கு அரு மருந்தாக இது பயன்படும் என்று தமிழக அதிகாரிகள் அந்த குழுவிடம் எடுத்து கூறினர். இதற்கு பாராட்டு தெரிவித்த அந்த குழுவினர், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்று கூறினர்.