அம்மா சிறு வணிகக் கடன் உதவி வழங்கும் திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

அம்மா சிறு வணிகக் கடன் உதவி வழங்கும் திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

வெள்ளி, ஜனவரி 22,2016,

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு, அம்மா சிறு வணிகக் கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 14-ந் தேதி அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்றுமுதல் (வெள்ளிக்கிழமை) சிறுவணிகர்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. கடன் வழங்கும் திட்டத்துக்கு அம்மா சிறு வணிகக் கடன் உதவி திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்- அமைச் சர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

அம்மா சிறு வணிகக் கடன் உதவி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:-

1, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.5 ஆயிரம் வரை வட்டியில்லாக் கடன் உதவி வழங்கப்படும்.

2,சிறு வணிகர்களுக்கு உதவிடும் வகையில் 11 சதவீதம் வட்டியை தமிழக அரசே ஏற்கும்.

3,பூக்கள், பழங்கள், காய்கறிகள், உணவு பொருள் போன்றவற்றை விற்கும் தெருவோர சிறு வணிகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், பெட்டிக்கடை நடத்துவோர் பயன் பெறலாம்.

4,எளிய தவணையில் வாரம் ரூ.200 வீதம் 25 வாரங்களில் கடனை திருப்பி செலுத்தலாம்.

5 குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் சிறு வணிகர்கள் 4 சதவீத குறைந்த வட்டியில் மீண்டும் கடன் உதவி பெறும் வசதி உள்ளது.

எளிதில் கடன் பெறும் வகையில் 22-ந் தேதி (இன்று) முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை 500 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.