“அம்மா சிறு வணிகர் கடனுதவி திட்டம்” : வியாபாரிகளின் கடைகளுக்கே நேரில் சென்று அதிகாரிகள் வழங்குவதால் சிறுவணிகர்கள் மகிழ்ச்சி

“அம்மா சிறு வணிகர் கடனுதவி திட்டம்” : வியாபாரிகளின் கடைகளுக்கே நேரில் சென்று அதிகாரிகள் வழங்குவதால் சிறுவணிகர்கள் மகிழ்ச்சி

புதன், பெப்ரவரி 03,2016,

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கும் “அம்மா சிறு வணிகர் கடனுதவி திட்டத்தை” வியாபாரிகளின் கடைகளுக்கே நேரில் சென்று அதிகாரிகள் வழங்கி வருவதால், சிறுவணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறு வணிகர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 10 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து, சென்னையில் பல்வேறு இடங்களில் இதற்கான முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அம்மா சிறு வணிகர் கடனுதவி திட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 17 ஆயிரத்து 35 சிறு வியாபாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 54 ஆயிரத்து 653 வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 27 கோடியே 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறு வியாபாரிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில், இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக சிறு வணிகர்கள், வியாபாரம் செய்யும் இடத்திற்கே சென்று, கடன் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் தெரு, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்றன. சைதாப்பேட்டை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தங்களது வியாபார தளங்களுக்கே வந்து கடனுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வணிகர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.