அம்மா ஜெயலலிதா ஒதுக்கி வைத்த குடும்பத்தின் ஆட்சி வெற்றி பெற்றுள்ளது,தர்மம் மீண்டும் வெல்லும் : ஓ.பன்னீர்செல்வம்

அம்மா ஜெயலலிதா ஒதுக்கி வைத்த குடும்பத்தின் ஆட்சி வெற்றி பெற்றுள்ளது,தர்மம் மீண்டும் வெல்லும் : ஓ.பன்னீர்செல்வம்

ஞாயிறு, பிப்ரவரி 19, 2017,

சென்னை : எந்தக் குடும்பத்தை ஜெயலலிதா ஒதுக்கிவைத்தாரோ, அந்தக் குடும்பத்தின் ஆட்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது.தர்மம் வெல்லுவதற்கு மீண்டும் கால அவகாசம் உள்ளது. உறுதியாகச் சொல்லுகிறேன். இறுதியில் தருமமே வெல்லும். என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியதாவது;-

தர்மம் வெல்லுவதற்கு மீண்டும் கால அவகாசம் உள்ளது. உறுதியாகச் சொல்லுகிறேன். இறுதியில் தருமமே வெல்லும்.15 நாள்கள் அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களை தொகுதிக்கு அனுப்பி வேண்டும் என்றும் ஒரு வாரம் கழித்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பேரவையில் வலியுறுத்தினோம். ரகசிய வாக்கெடுப்பு தேவை என்றோம். இதை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

பேரவைக் கூட்டத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இதே கருத்தை வலியுறுத்திய திமுக எம்எல்ஏக்களை பலவந்தமாக காயப்படுத்தி, ஜனநாயக மரபுகளை மீறி அவர்களை வெளியேற்றி, தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லுபடி ஆகுமா, ஆகாதா என்ற தீர்ப்பு மக்களிடம் விடப்படுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா யாரைக் கட்சியில் இருந்தும், தன் வீட்டிலிருந்தும் ஒதுக்கி வைத்தாரோ, தான் உயிரோடு இருக்கும் வரை யாரை அனுமதிக்கவில்லையோ அவர்களின் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சி இல்லை. சசிகலாவின் ஆட்சிதான் நடக்கிறது. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி உறுதியாக ஏற்படும் என்றார்.