“அம்மா”, முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் “அம்மா” மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் இன்று முதல் ஆன்லைன்னில் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

“அம்மா”, முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் “அம்மா” மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் இன்று முதல் ஆன்லைன்னில் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

புதன், மார்ச் 09,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்து பரிசோதனை செய்துகொள்ளும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

உலக அளவில் சர்க்கரைநோயின் தலைநகராக விளங்கும் இந்தியாவில் நீரிழிவு மட்டுமின்றி, உடல் உறுப்புகளைப் பாதிக்கக் கூடிய அடிப்படை நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அனைவருக்கும் உடல் பரிசோதனை என்பது அத்தியாவசியத் தேவையாகிறது. என்றாலும், உடல் பரிசோதனைக்கு ஆகும் செலவு சாமானிய மக்களை திகைக்க வைக்கிறது. பணம் படைத்தவர்கள் மட்டுமே முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்ற சூழ்நிலையை மாற்றும் வகையில், குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை, முதலமைச்சர் செல்வி. ஜெ ஜெயலலிதா, சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.

நீரிழிவு, இதயம் சார்ந்த நோய்கள், ரத்தத்தில் creatinine உப்பு அதிகரிப்பால் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகள், கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படும் உடல் பிரச்னைகள் போன்ற நீண்டகால உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய- உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யக்கூடிய நோய்களை பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் உரிய மருந்துகள் மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.

அனைத்துத் துறைகளிலும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை நிறைவேற்றி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மருத்துவத் துறையிலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பேதமற்ற வகையில் நிறைவேற்றும் வகையில் குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும் “அம்மா” முழு உடல் பரிசோதனை திட்டங்களை அறிமுகப்படுத்தி இந்திய நாட்டிற்கே வழிகாட்டியுள்ளார். அதன்படி, 250 ரூபாயில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் “அம்மா”, முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் “அம்மா” மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டங்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டன.

இத்திட்டத்தின் மூலம் சர்க்கரை, உப்பு, ஹீமோகுளோபின், கொழுப்பு உள்ளிட்ட ரத்த பரிசோதனைகள் மற்றும் எக்ஸ்ரே, இ.சி.ஜி, அல்ட்ராசோனோகிராஃப் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் 250 ரூபாய்க்கு மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பரிசோதனைகளின் அடிப்படையில் உரிய மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை இன்று பிற்பகல் முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, www.mmcmhc.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.