அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத்திட்டம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத்திட்டம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, ஜூலை 08,2016,

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் 4 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர, சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

2012-ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுக்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் அரசுப் பணியாளர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஜூன் 30-இல் முடிவடைந்தது.

இதையடுத்து, ஜூலை 1 முதல் 2020-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரையில் மேலும் 4 ஆண்டுகளுக்கு சில கூடுதல் பயன்களுடன் செயல்படுத்திட முதல்வர் ஜெயலலிதா

உத்தரவிட்டுள்ளார்.

கூடுதல் நிதியுதவி: புதிய திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர் குடும்பத்துக்கு அனுமதிக்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சம் என தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியானது ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தது 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள், எவ்வித வயது வரம்புமின்றி பயன் பெறலாம். விபத்து காரணமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

யார் யாருக்குப் பயன்? அரசுத் துறைகள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள், சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள்-குடும்பத்தினர் பலன்களைப் பெற முடியும்.

சந்தாவாக மாதம் ரூ.180 செலுத்த வேண்டும். அரசு தனது பங்காக மொத்தம் ரூ.17.90 கோடியை ஆண்டுதோறும் காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கும்.

இதன்வாயிலாக சுமார் 10.22 லட்சம் அரசுப் பணியாளர்-அவர்தம் குடும்பத்தினர் பயன் பெறுவர்.

திறந்த ஒப்பந்தப்புள்ளி முறை பின்பற்றப்பட்டு, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு புதிய திட்டத்தை ஏற்ற யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது என்று தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.