அரசு ஊழியர்களுக்கு 11 புதிய சலுகைகள்:சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 11 புதிய சலுகைகள்:சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, பெப்ரவரி 20,2016,

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆராய வல்லுநர் குழு உள்பட 11 புதிய சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திடத்தையே செயல்படுத்த வேண்டுமென பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன. இந்தக் கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். எனவே, அதுபற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும்.
ஊதிய விகிதங்களை மாற்றியமைத்தல், தொகுப்பூதியத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வருவோருக்கு முறையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசால் பெறப்பட்டுள்ளன. எனவே, அந்தக் கோரிக்கைகளை ஊதியக் குழுவே பரிசீலிக்க இயலும். இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் ஊதியக் குழு மூலம் பரிசீலிக்கப்படும்.
காப்பீடு-குடும்ப நலநிதி: பணிக் காலத்தில் அரசு அலுவலர் இறந்தால், அவரது வாரிசுதாரருக்கு ரூ.1.5 லட்சம் வழங்கப்படுகிறது. இந்தக் குடும்ப நலநிதி உதவியை உயர்த்த வேண்டுமென பல்வேறு சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று உதவித் தொகை ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படும்.
இதற்காக அரசு அலுவலரின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.60 பிடித்தம் செய்யப்பட்டு மானியத்துக்கான கூடுதல் செலவான ரூ.6 கோடியையும் அரசே அளிக்கும்.
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்-உள்ளாட்சி அமைப்புகள்-கிராம ஊராட்சிப் பணியாளர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த காப்பீட்டுத் தொகையும் ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். இதனால், அரசுக்கு ரூ.20 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
அங்கன்வாடி-சத்துணவுப் பணியாளர்கள்: ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும். இதனால், 86 ஆயிரத்து 873 பணியாளர்கள் பயன்பெறுவர். அரசுக்கு ரூ.51.13 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணப் பயன் ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும். சமையலர்கள்-சமையல் உதவியாளர்களுக்கு பணப் பயன் ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
ஊரக வளர்ச்சித் துறையில் பட்டப்படிப்பு முடித்த மேற்பார்வையாளர்களுக்கு இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுக்கான பணிக் காலத் தகுதி ஏழு ஆண்டுகளாகவும், பொறியியல் பட்டப் படிப்பு முடித்தோருக்கு 4 ஆண்டுகளாகவும் குறைக்கப்படும்.
தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயம்: அரசு அலுவலர்கள் பணி சார்ந்த வழக்குகளை நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தொடுத்து வந்தனர். இப்போது, இந்தத் தீர்ப்பாயம் இல்லாததால் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்படுகின்றன. அரசு அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பூதியம் ரூ.15 ஆயிரம்
சென்னை, பிப். 19: கலை-அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
பேரவையில் விதி 110-ன் கீழ், வெள்ளிக்கிழமை அவர் படித்தளித்த அறிக்கை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இணைப் பேராசிரியர்களாகப் பணிபுரியும் 157 மருத்துவர்களுக்கு, பேராசிரியர் பதவி உயர்வு அளிக்கப்படும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களில், பணிமூப்பு அடிப்படையில் 1,500 செவிலியர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவர். பணி மூப்பு அடிப்படையில் 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும். அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மாத மதிப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும்.
கருணை அடிப்படை பணி நியமனம்: இந்த மாதம் 1-ஆம் தேதி வரை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு எந்தவித விதித் தளர்வும் தேவைப்படாத அனைத்து அரசு ஊழியர்களின் நியமனமும் அரசு உத்தரவு மூலமாக முறைப்படுத்தப்படும். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதவிகளுக்கு பொதுவான அரசாணை வெளியிடப்பட்ட பிறகு ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும். தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்படும் வரையில் அவர்களை தாற்காலிக அரசு அலுவலர்களாகக் கருதி அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வகை செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.