அரசு பஸ்–லாரி மோதல்:உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசு பஸ்–லாரி மோதல்:உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

மதுரை அருகே அரசு பஸ்–லாரி மோதல் விபத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சுப்புலாபுரம் கிராமம், பாறைபட்டி சோதனைச்சாவடி அருகே நேற்று பிற்பகல் நெல்லையில் இருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், கரூரில் இருந்து செங்கோட்டை சென்று கொண்டிருந்த லாரியும் மோதியதில், பஸ்சில் பயணம் செய்த 15 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்து குறித்து எனக்கு செய்தி கிடைத்தவுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு, அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும் நான் உத்தரவிட்டு உள்ளேன்.

இந்த சாலை விபத்தில் 32 நபர்கள் பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டு உள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டு உள்ளேன்.இவ்வாறு முதலமைச்சர் அறிக்கையில் கூறியுள்ளார்.