அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெரும் 960 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் காமராஜர் விருது : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெரும் 960 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் காமராஜர் விருது : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூலை ,16 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை, 

விருதுநகர் : விருதுநகர் கே.வி.எஸ்.பள்ளி வளாகத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வித்திருவிழா நேற்று  நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை தாங்கினார்.விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை, தென்காசி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

இந்த விழாவில் வந்தோம், சென்றோம் என்று இல்லாமல் வந்தோம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டோம் என்ற வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தபடி ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
ஆண்டுதோறும் தமிழ்வழிக் கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளை ஒரு மாவட்டத்திற்கு 30 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கும் 960 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு காமராஜர் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் 15 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு காமராஜர் விருதும், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9, 10, 11, 12-ம் வகுப்புகளை கணினி மயமாக்குவதற்காக ரூ.324 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ரூ.1 கோடியே 32 லட்சம் செலவில் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று கூறினார்.