அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் படங்கள் இடம் பெறலாம் : மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் படங்கள் இடம் பெறலாம் : மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வெள்ளி, மார்ச் 18,2016,

அரசு விளம்பரங்களில் முதல் அமைச்சர் படம் இடம்பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு உள்பட 7மாநிலங்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது. மத்திய-மாநில அரசுகள் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரது படங்கள் இடம் பெற்று வந்தன. அரசுவிளம்பரங்கள் மூலம் முதல்அமைச்சர்கள்,இதர அமைச்சர்கள் சுயவிளம்பரம் தேடிக்கொள்வதாகவும் இதனால் மாநில அரசுகளுக்கு பணவிரயம் ஆவதாகவும் சுப்ரீம்கோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் அரசு விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமைநீதிபதி ஆகியோர் மட்டுமே இடம் பெற வேண்டும். முதல் அமைச்சர், மாநில அமைச்சர்கள் படங்கள் இடம்பெறக்கூடாது என்று கடந்த ஆண்டு மே மாதம் 13ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்தும் உத்தரவை மறுபரீசீலனை செய்யக்கோரியும், மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று தமிழ்நாடு, கர்நாடகம், சத்தீஸ்கர், அசாம்,உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநில அரசுகள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பினாசி சந்திரகோஸ், அடங்கிய சுப்ரீம்கோர்ட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய , மாநில அரசுகள் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார்.  அவர் வாதிடும் போது கூறியதாவது,  அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறக்கூடாது என்ற உத்தரவு தவறானது. அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. அரசின் திட்டங்கள் கொள்கைகள் என்று வரும்போது, அதில் தலைவர்களின் படங்களும் அடங்கும்.

கூட்டாட்சி நடைமுறையில் பிரதமர், ஜனாதிபதி, படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்பது தனிநபர் துதி பாடும் முறைக்கு வழிவகுக்கும், ஜனநாயக முறையில், பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் பெரிய கருத்து வேறுபாடு இல்லை. இருவருமே மக்கள் பிரதிநிதிகள்தான். இதில் ஒருவரது படத்தை வெளியிட அனுமதிப்பதும் மற்றொருவர் படத்தை வெளியிட மறுப்பதும் தவறானது. 5ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி நடக்கும் போது, பிரதமர் படத்தை மட்டுமே வெளியிடும்போது, மற்ற அமைச்சர்கள் முகம் தெரியாதவர்களாக ஆகிவிடுவார்கள். போலியோ சொட்டு மருந்து வழங்குதல், மருத்துவ திட்டங்கள் ,கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தலைவர்களின் படங்களை வெளியிடும்போது, அது மக்களின் கவனத்தை ஈர்த்து திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடிகிறது.

எனவே இந்த விஷயத்தில் கோர்ட் தலையிடக்கூடாது. எனவே கோர்ட் தனது உத்தரவை மறுபரீசீலனை செய்யவேண்டும். இவ்வாறு அவர்வாதிட்டார். வழக்கறிஞர்கள் வாதம் முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது அரசு விளம்பரங்களில் முதலமைச்சர்களின் படங்களை பிரசுரிக்கலாம் என்று நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேடலும் கவர்னர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், ஆகியோரது படங்களும் அரசு விளம்பரங்களில் இடம் பெறலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். தமிழ்நாடு ,கேரளா,மேற்கு வங்கம்,அசாம் உள்பட 5மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வெளிவந்த இந்த தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.