அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளி, நவம்பர் 18,2016,

சென்னை : அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நேற்று மாலை 5 மணிமுதல், வாக்குப்பதிவு நடைபெறும் நாளை (19ம் தேதி) மாலை வரை கருத்துக்கணிப்புகள் வெளியிடத்தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடக்கவுள்ள 4 தொகுதிகளிலும், நேற்று மாலை 5 மணி முதல், வாக்குப்பதிவு நாளான நாளை (19-ம் தேதி) மாலை 5 மணி வரை கருத்துக்கணிப்பு நடத்தவோ, முடிவுகளை வெளியிடவோ கூடாது என்றும்,  தேர்தல் நாளன்று காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கும் தடை, தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ கூடாது, தேர்தல் தொடர்பான விவரங்களையும், திரைப்படம், தொலைக்காட்சி, வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது என பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ள 3 தொகுதிகளின் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும் முன் தங்கள் அடையாளத்தை உறுதி செய்ய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி-அஞ்சலக கணக்குப் புத்தகம், பேன் கார்டு, தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதி அளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்பட சீட்டு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வாக்காளரின் பெயர், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையை செலுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.