அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மகளிர் தின விழா கேக் வழங்கி கொண்டாட்டம்

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மகளிர் தின விழா கேக் வழங்கி கொண்டாட்டம்

செவ்வாய், மார்ச் 08,2016,

இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கித் தந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரி மையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், பெண்கள் அனைத்து நிலைகளிலும் சிறப்புற்று வாழ வேண்டும் என்பதற்காகவும், தமது தலைமையிலான அரசு செய்துள்ள அளப்பரிய சாதனைகளை பட்டியலிட்டு, பெண்கள் அனைவருக்கும் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் இன்று காலை அ.தி.மு.க. மகளிர் அணியினர் அனைவரும் பெருந்திரளான அளவில் திரண்டிருந்து தங்களுக்குள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கேக்கினை, மகளிர் அணிச் செயலாளரும், அமைச்சருமான கோகுல இந்திரா கேக் வெட்டி, அதை அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவருமான டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், இலக்கிய அணிச் செயலாளரும், அமைச்சருமான வளர்மதி, மகளிர் அணி துணைச் செயலாளரும், தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவருமான சி.ஆர். சரஸ்வதி மற்றும் மகளிர் அணி துணை நிர்வாகிகள் உள்ளிட்ட வந்திருந்த ஆயிரக்கணக்கான மகளிர் அனைவருக்கும் கேக் வழங்கி மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.