அ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேச்சு

அ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேச்சு

ஆகஸ்ட் 31, 2017 ,வியாழக்கிழமை,

சென்னை : வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் அஞ்சல் தலையை வெளியிட, அதனை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா கழகத்தைக் காப்பாற்ற எத்தனை அவமானங்களையும், துன்பங்களையும் சந்தித்திருப்பார்கள் என்பது ஒவ்வொரு கழகத் தொண்டனுக்கும் தெரிந்திருக்கும். எனக்குப் பிறகும் இந்தக் கழகம் 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி அதிகாரத்தில் இயங்கும் என்பதை சட்டமன்றத்திலேயே சுட்டிக்காட்டினார் அம்மா (ஜெயலலிதா). அண்ணாவின் உருவத்தில், எம்.ஜி.ஆரின் எண்ணத்தில் ஜெயலலிதா உழைப்பில், அ.தி.மு.க தொண்டர்களின் ஒற்றுமையில், இந்த ஆட்சி மேலும் வலிமை பெறும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தனித்துவம் கொடுத்து திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒடுக்கி விட முடியாது

தேவையறிந்து இன்னும் பல திட்டங்களை இந்த அரசு வழங்க இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். காஞ்சித் தலைவனின் பெயரைத் தாங்கி வளர்ந்திருக்கிற இந்த மாபெரும் இயக்கத்தை எந்த சக்தியாலும் ஒடுக்கி விட முடியாது என்பதை நாங்கள் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த இயக்கத்தைப் பாதுகாக்க, கழகக் கண்மணிகள் அனைவரும் ஓரணியில் நிற்போம் என்றும் அதற்காக எந்தத் தியாகம் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும், சுய நலத்திற்காக, கழகத்தை கூறுபோட ஒருக்காலமும் நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்றும், அண்ணா பிறந்த இந்தப் புனித மண்ணில் இருந்தபடி சபதம் ஏற்கின்றோம்.

ஜெயலலிதா ஆட்சியில் இன்றைக்கு ஏராளமான திட்டங்களை நாம் செய்து முடித்திருக்கின்றோம். எம்..ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய  இருபெரும் தலைவர்களும் கண்ட கனவை நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். கிராமம் செழிக்க வேண்டும். கிராமத்திலிருக்கின்ற ஏழை, எளிய, உழைப்பாளி, விவசாயி, விவசாயத் தொழிலாளி முன்னுக்கு வரவேண்டும். சமூகப் பொருளாதாரம் மேம்பாடு அடையவேண்டுமென்று இரவு, பகல் பாராமல் இரண்டு பெரும் தலைவர்களும் உழைத்தார்கள். அந்த உழைத்த தலைவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுகின்ற விதமாக அம்மாவினுடைய அரசு செயல்படும், செயல்படும் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மண்ணிலே தான், காஞ்சிபுரம் மாவட்டத்தில், முதன்முதலில் மணிமங்கலத்தில் குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை நாம் துவக்கி வைத்தோம். இந்த திட்டம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டம். அதிகமாக ஏரி, குளங்கள் நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம்.  கிட்டத்தட்ட 2000 ஏரிகளைக் கொண்ட மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம். 4000 குளங்கள், குட்டைகள் இருக்கின்ற மாவட்டம். முழுக்க, முழுக்க இந்த மாவட்டத்திலிருக்கின்ற விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் அந்த நீரைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்கின்றார்கள், குடிநீருக்குத் தேவையான நீரைப் பெறுகின்றார்கள். ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் பருவமழை மூலம் பொழிகின்ற மழை நீர் முழுவதும் சேமித்து வைப்பதற்காக, குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை இந்த மாவட்டத்திலே துவக்கி வைத்திருக்கின்றேன் என்று பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில், தொண்டர்கள் மத்தியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருப்பது ஜெயலலிதாவின் நல்லாட்சி. எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா, லட்சியங்களை நிறைவேற்றும் ஆட்சி இது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்கொள்ளும் கேடயமாக, தாக்கும் ஆயுதமாக வழிகாட்டுவது எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாதான். எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா, ஆசி இருக்கும்வரை இந்த பொற்கால ஆட்சி தொடரும். இந்த எஃகு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை, ஊழல் ஆட்சிக்கு இடமில்லை. எங்களை நம்பியவர்கள் கெட்டுப்போகமாட்டார்கள், கெட்டுப்போக விடமாட்டோம். இவ்வாறு ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.