அ.தி.மு.க.வில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஜெயலலிதா 6-வது நாளாக வேட்பாளர் நேர்காணல்

அ.தி.மு.க.வில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஜெயலலிதா 6-வது நாளாக வேட்பாளர் நேர்காணல்

ஞாயிறு, மார்ச் 27,2016,

அ.தி.மு.க.வில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று 6-வது நாளாக வேட்பாளர் நேர்காணலை நடத்தினார்.
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வில் விருப்பமனு வாங்கப்பட்டது. மொத்தம் 26,174 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்தநிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
தொடர்ந்து, 21-ந்தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது. நேற்று 6-வது நாளாக நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நடத்தினார்.
காலை 11.30 மணிக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில தொகுதிகளுக்கும், விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விடுபட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடந்தது. இதேபோல், மதியம் 3 மணிக்கு திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள விடுபட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடந்தது.
இந்த நேர்காணலில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை 10 மணி முதலே போயஸ் கார்டன் பகுதிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வரத்தொடங்கிவிட்டனர். சிலர் அவர்களது ஆதரவாளர்களையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.