அ.தி.மு.க.வில் 4-வது நாளாக முதல்வர் ஜெயலலிதா நடத்திய வேட்பாளர் நேர்காணல் : தொண்டர்கள் உற்சாகம்

அ.தி.மு.க.வில் 4-வது நாளாக முதல்வர் ஜெயலலிதா நடத்திய வேட்பாளர் நேர்காணல் : தொண்டர்கள் உற்சாகம்

வெள்ளி, மார்ச் 25,2016,

அ.தி.மு.க.வில் 4-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், சிவகங்கை, விருதுநகர், வேலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளிடம் வேட்பாளர் நேர்காணல் நேற்று நடந்தது.
வேட்பாளர் தேர்வு
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, கடந்த 6-ந்தேதி, 21-ந்தேதி, 22-ந்தேதி என 3 நாட்களாக வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர் தேர்வு நடந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒன்று முதல் 3 பேர் வரை அழைக்கப்பட்டிருந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவே நேரடியாக வேட்பாளர்களை வரவழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார்.

நேர்காணலில் சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் மாவட்ட வாரியாக அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெயிலில் காத்திருக்க வைக்கப்படாமல் போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ஏ.சி. அறையில் 50 பேராக அமர வைக்கப்படுகிறார்கள்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரிக்கிறார். அவர்களது குடும்ப பின்னணி, கட்சிப் பணியாற்றும் விதம், தொழில் உள்ளிட்டவை பற்றி விசாரிக்கிறார். மூத்த நிர்வாகிகளோ, உதவியாளர்களோ யாரும் இன்றி ஜெயலலிதாவே நேர்காணல் நடத்துகிறார். அவர்கள் அளிக்கும் பதில்களை தன் கைப்பட குறிப்பு எடுத்துக் கொள்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் எத்தனை பேர் விருப்பமனு கொடுத்துள்ளனர் என்பதை கையில் வைத்துக் கொண்டு அனைவரிடமும் விசாரித்து அவர்களில் இருந்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்கிறார்.

இதனால் நேர்காணலுக்கு சென்று திரும்பும் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். நேர்காணலுக்கு சென்று வந்தவர்கள் சீட் கிடைத்து விடும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர். அம்மாவே எங்களை அழைத்து விசாரித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கட்சிப்பணி, தேர்தல் பணி பற்றி எங்களிடம் பரிவுடன் பேசி விசாரித்தார்.எங்களால் நன்றாக பேச முடிந்தது. எங்கள் கருத்துக்களை கவனமாக கேட்டுக் கொண்டார். அம்மா யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று உறுதியளித்துவிட்டு வந்தோம் என்று தெரிவித்தனர்.