அ.தி.மு.க.வுக்கு மேலும் 100 கட்சிகள்-அமைப்புகள் ஆதரவு

அ.தி.மு.க.வுக்கு மேலும் 100 கட்சிகள்-அமைப்புகள் ஆதரவு

வெள்ளி, மார்ச் 25,2016,

அ.தி.மு.க.வுக்கு மேலும் 100 கட்சிகள்-அமைப்புகள் நேற்று ஆதரவு தெரிவித்தன.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, தமிழ் மாநில முஸ்லிம் லீக், சமத்துவ மக்கள் கழகம் ஆகிய 7 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தநிலையில், கடந்த 18-ந்தேதி அ.தி.மு.க.வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. தமிழக வாழ்வுரிமை கட்சியிடம் மட்டும் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க தொடங்கின. கடந்த 19-ந்தேதி அ.தி.மு.க. கூட்டணிக்கு 34 கட்சிகள்-அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில், 21-ந்தேதி மேலும், 55 கட்சிகள்-அமைப்புகள் இந்த கூட்டணிக்கு ஆதரவு தந்தன.
100 கட்சிகள்-அமைப்புகள் ஆதரவு
நேற்று முன்தினம் (புதன்கிழமை) 50 கட்சிகள்-அமைப்புகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 100 கட்சிகள்-அமைப்புகள் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தன.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு வந்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் சிறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்து கடிதம் கொடுத்தனர்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு சுமார் 700 கட்சிகள்-அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க விருப்பம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.