ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ; சிறந்த ஆசிரியர்களுக்கு விருது

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு  தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ; சிறந்த ஆசிரியர்களுக்கு விருது

செவ்வாய், செப்டம்பர் 06,2016,

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் ஆசிரியர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.பள்ளியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி விருது வழங்கி கௌரவித்தார்.
திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து, திருத்தணியில் பயின்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராகப் பதவி வகித்தவர். அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு நடுநிலைப் பள்ளியில் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் சார்பில் ஆசிரியர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஏ. சுந்தரவல்லி, எம்எல்ஏ-க்கள் சிறுணியம் பலராமன், பி.எம்.நரசிம்மன், ஏழுமலை, திருவள்ளூர் – காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் த.சந்திரன், நகர்மன்றத் தலைவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் ராதாகிருஷ்ணனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்த 28 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை மாவட்ட ஆட்சியர் எ.சந்தரவல்லி வழங்கினார்.
அதேபோல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ராதாகிருஷ்ணனின் சிலைக்கு அப்பள்ளியின் பெற்றோர் } ஆசிரியர் கழகத் தலைவர் வி.குப்புசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தனர்.
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநில பொதுச் செயலாளர் மதிவாணன், மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம், மாவட்டக் கல்வி அலுவலர் லில்லிபுஷ்பராணி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.