ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது,கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம் : டிடிவி தினகரன் பேட்டி

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது,கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம் : டிடிவி தினகரன் பேட்டி

ஆகஸ்ட் 27 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை,

தேனி : ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது. கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தேனியில் இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:-

”இன்றைக்கு நடைபெறுவது தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தம். 122 எம்.எல்.ஏக்களும் எங்களுக்கு ஆதரவானவர்கள்தான். பதவிக்காகவே ஒருசிலர் செயல்பட்டு வருகிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 90% பேர் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்.

ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர்; வேறு எந்த பயத்தினாலோ தங்கவில்லை. புதுச்சேரியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் தியாகத்திற்காக துணை நிற்கிறார்கள். கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். தற்போது நடப்பது துரோகத்தின் அரசு. அதனை வெல்ல புதுச்சேரியில் உள்ள எம்.எல்.ஏக்கள் போராடுகிறார்கள். தியாகத்தோடு சேர்ந்து இயக்கத்தைக் காப்பதற்காக எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். தியாகத்திற்கான யுத்தத்தில் சசிகலா வெற்றி பெறுவார்.

யாருடனும் சமரசம் செய்துகொண்டு எதையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. வாக்காளர்கள் எந்த மனநிலையில் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். பதவியைக் கேட்டுப் பெற்ற ஓபிஎஸ்ஸை சேர்த்துக் கொண்டது சுயநலமே. இரட்டை இலையை முடக்கிய ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொண்டது துரோகம்தான்.

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது, கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம். கட்சியின் நலன் கருதி எந்த நடவடிக்கையும் எடுக்க எனக்கு சசிகலா அனுமதி அளித்துள்ளார் என்று கூறினார்.