ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்தாவிட்டால் கமல்ஹாசன் மீது வழக்கு : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரிக்கை

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்தாவிட்டால் கமல்ஹாசன் மீது வழக்கு : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரிக்கை

ஜூலை ,16 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை,

கோவை : தமிழக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்தவில்லை என்றால் நடிகர் கமல் மீது வழக்கு தொடரப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள காயத்ரி ரகுராம், ‘சேரி பிஹேவியர்’ என்று இழிவாக பேசினார். இதற்கு மக்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், சென்னை காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தார். 

இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர, செய்தியாளர்களை கமல் சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, சமீபலகாலமாக கமல் ஆதாரமில்லாமல் பேசி வருகிறார். சினிமாவுக்கு கேளிக்கை வரி பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு திரைதுறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதை கமல் நன்கு தெரிந்திருந்தும் இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ஏன் முன்வைக்கிறார். அதிமுக அரசை குறை கூறுவதை கமலஹாசன் இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். எங்கள் அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. கமலஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை அவர் விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா? என்றார்.  மேலும், இதுபோன்ற அவதூறு பேச்சுக்களை அவர் தொடர்ந்தால் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரித்தார்.