ஆமை புகுந்த வீடு எப்படி உருப்படும்? : குஷ்பு பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கருத்து

ஆமை புகுந்த வீடு எப்படி உருப்படும்? : குஷ்பு பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கருத்து

புதன், ஜனவரி 27,2016,

காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பு மற்றும் இளங்கோவன் ஆகியோர் மட்டும் முன்னிலை பெற வேண்டும் என்று நினைக்கின்றனர் என்று முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி கூறியுள்ளார்.

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விஜயதாரணி சமீபத்தில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தன்னுடைய நீக்கம் பற்றி ஆவேசம் அடைந்த விஜயதாரணி குஷ்பு மற்றும் இளங்கோவன் ஆகியோருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். சமீபத்தில் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது “என்னை நீக்கியதற்கு இளங்கோவன்தான் காரணம். அவர் என்னை தரக்குறைவாக பேசி வந்தார். என் பொறுப்பை உணர்ந்து பொறுமையோடு பணியாற்றினேன். நான், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற குடும்பத்தில் இருந்து வந்தவள். இளங்கோவன் பேச்சைக் கேட்டு என்னை நீக்கியுள்ளார்கள்.

இளங்கோவன் பெண் தலைவர்களை தரக்குறைவாக பேசி வருகிறார். இப்படிப்பட்ட ஒருவரை தலைவராக வைத்துக்கொண்டு, அவரைக் காப்பாற்ற நினைக்கிறது காங்கிரஸ் மேலிடம். ஆளே இல்லாத கட்சியில் ஆட்டம் போடுகிறார் இளங்கோவன். மிகவும் மோசமான நிலையை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் வெறுமனே உறுப்பினர் சேர்த்தோம், கமிட்டி அமைத்தோம் என்று வாய்ச்சவடால் மூலம் தலைமையை ஏமாற்றி வருகிறார்.

குஷ்புவை பற்றி பேசும் போது “அவர் ஏற்கெனவே ஒரு திராவிடக் கட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டு வந்தவர் தான் கட்சிக்குள் சண்டையை ஏற்படுத்தி, தற்போது பாரம்பரியமான காங்கிரசையும் நாசப்படுத்துவதற்கு வந்திருக்கிறார். ஆமை புகுந்த வீடு எப்படி உருப்படும்? அதுபோலதான் இதுவும். இப்போது இவர்கள் இருவராலும், சத்தியமூர்த்தி பவனுக்கு ஒரு தலைவர்கூட வருவதில்லை. இவர் வந்துதான் எல்லோரையும் விரட்டிவிட்டார். எல்லா மேடைகளிலும் இவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கடைசியில், எல்லோரையும் நீக்கிவிட்டு இவர்கள் இருவர் மட்டும்தான் கட்சியில் இருப்பார்கள் போல” என்று தெரிவித்தார்.