ஆர்.கே.நகர் தொகுதியில் ‘டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதால் எனது வெற்றி எளிதாகி விட்டது ; ஜெ.தீபா பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதியில் ‘டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதால் எனது வெற்றி எளிதாகி விட்டது ; ஜெ.தீபா பேட்டி

வியாழக்கிழமை, மார்ச் 16, 2017,

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில்  ‘அ.தி.மு.க. வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்ட உடனே எனது வெற்றி உறுதியாகி விட்டது’ என்று ஜெ.தீபா கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தேர்தல் வியூகம் குறித்து தனது பேரவை நிர்வாகிகளிடம் சென்னை, தியாகராயநகர், சிவஞானம் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினார்.இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணிகள் குறித்த பொறுப்புகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் ஜெ.தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-

கேள்வி:– அ.தி.மு.க. வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:– கருத்து தெரிவிக்கும் அளவிற்கு அவர் முக்கியமான நபர் இல்லை. இந்த தேர்தலில் பொதுமக்களால் அவர் நிச்சயம் புறக்கணிக்கப்படுவார். அ.தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு தராமல், சசிகலா குடும்பத்தினரையே போட்டியிட வைத்திருப்பதால் தேர்தல் முடிவு எதிர்மறையான விளைவைத்தான் தரும். அவர் போட்டியிடுவதால் எனது வெற்றி உறுதியாகி விட்டது.

கேள்வி:– நீங்கள் எப்போது வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளீர்கள்?

பதில்:– நாளை (இன்று) ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பேரவை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடத்த இருக்கிறேன். அதன்பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை அறிவிப்பேன்.

கேள்வி:– பேரவை சார்பில் போட்டியிடும் நீங்கள் சுயேச்சையாக தானே கருதப்படுவீர்கள்? எனவே பேரவையை அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் உள்ளதா?

பதில்:– சுயேச்சையாக தான் கருதப்படுவேன். தற்போது பேரவையை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டம் இல்லை. பொதுத்தேர்தல் வரும்போது ஆலோசித்து உரிய முடிவை அறிவிப்பேன்.

கேள்வி:– ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டெல்லியில் தேர்தல் கமி‌ஷனரை சந்தித்துள்ளாரே?

பதில்:– இதற்கு முன்பே இந்த நடவடிக்கையை எடுக்காமல், இடைத்தேர்தல் நடக்க இருக்கும் இந்த குறுகிய காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமாக இருக்காது என்று பலரும் கூறுகின்றனர்.

கேள்வி:– பேரவை உறுப்பினர்களுக்கான படிவம் எவ்வளவு வழங்கப்பட்டு உள்ளது? மேலும் எவ்வளவு வினியோகிக்க திட்டம் உள்ளது?

பதில்:– கடந்த 4 நாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது. இலக்கு என்று இல்லாமல் உறுப்பினராக சேர விரும்பும் அனைவருக்கும் விண்ணப்பம் வழங்கப்பட்டு, பேரவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.  இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.