ஆர். கே.நகர் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் : தொகுதி மக்களிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி

ஆர். கே.நகர் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் : தொகுதி மக்களிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி

செவ்வாய், ஜூன் 07,2016,

சென்னை:தமிழகத்திலேயே, ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதி ஆக்குவேன் என்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க வெற்றி பெற்று, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில்இருந்து புறப்பட்டு காமராஜர் சாலை, ராயபுரம் மேம்பாலம், சூரிய நாராயண செட்டி தெருவழியாக, ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியின் தொடக்க இடமான எம்.ஜி.ஆர். சிலை -பெட்ரோல் பங்க் வந்தடைந்த போது, அங்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பெருந்திரளானோர் குழுமியிருந்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

காசிமேடு சூரிய நாராயண செட்டி தெரு, ஜீவரத்தினம்சாலை சந்திப்பு வந்தடைந்து முதல்வர் ஜெயலலிதா, அங்கே திரண்டிருந்த பொதுமக்களிடையே பேசியதாவது: –

ஆர்.கே.நகர் தொகுதிவாழ் மக்களாகிய உங்களுக்கு நான் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். என்னை 6-வது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக ஆக்கியதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 2-வது முறையாக தொடர்ச்சியாக என்னை தமிழ்நாட்டின் முதல்வராக ஆக்கியதற்காக உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 2-வது முறையாக தொடர்ச்சியாக ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்தமைக்காக உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆர்.கே.நகர் தொகுதி மக்களாகிய நீங்கள் எனது நெஞ்சில் என்றென்றும் நிரந்தர இடம் பெற்றிருக்கிறீர்கள். கடந்த வருடம் உங்கள் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்த பிறகு, ஓராண்டுக்குள் என் சக்திக்கு உட்பட்ட வரை இந்த தொகுதிக்காக எத்தனை நல்ல திட்டங்களை கொண்டு வர முடியுமோ அவ்வளவும் செய்திருக்கிறேன். இந்த தொகுதியில் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். இன்னும் நிறைய உங்களுக்காக செய்ய இருக்கிறேன்.

தேர்தல் நேரத்தில், நடந்து முடிந்த தேர்தலின் போது இங்கே உங்களிடம் வாக்கு கேட்க நான் வந்த போது உங்களுக்கு பல வாக்குறுதிகளை நான் அளித்திருக்கிறேன். ஒவ்வொன்றாக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டு வருகிறேன். விரைவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி முடிப்பேன் என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு அளிக்கிறேன்.

தமிழ்நாட்டிலேயே ஆர்.கே. நகர் தொகுதி என்றால் அது ஒரு முன் மாதிரியான தொகுதியாக விளங்குகின்ற வகையில் இந்தத் தொகுதியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல அனைத்துப் பணிகளையும் நான் மேற்கொள்வேன் என்ற உறுதியை உங்களுக்கு அளித்து, ஒவ்வொரு முறையும் நான் இங்கே வரும்போது நீங்கள் என் மீது பொழிகின்ற அன்பு, எனக்கு அளிக்கின்ற வரவேற்பு என்னை நெகிழ வைத்துவிடுகிறது என்பதைச் சொல்லி, என்றென்றும் உங்கள் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக நான் நடந்து கொள்வேன் என்ற வாக்குறுதியை உங்களுக்கு அளித்து மீண்டும் ஒரு முறை என்னை வெற்றி பெறச் செய்ததற்காக, மகத்தான வெற்றி பெறச் செய்ததற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு அருகே பொது மக்களின் வரவேற்பை ஏற்றுகொண்ட  முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது.,

ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் எனது நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. கடந்த ஆண்டு இடைத் தேர்தலின் போது நீங்கள் என்னை உங்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தப் பின்னர் கடந்த ஓராண்டு காலத்தில் என் சக்திக்கு உட்பட்ட வரையில் இந்த தொகுதிக்கு பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் நான் இந்த தொகுதிக்கு வரும்போது நீங்கள் என் மீது பொழியும் அன்பையும், எனக்கு அளிக்கும் வரவேற்பையும் பார்க்கின்ற போது என் நெஞ்சம் நெகிழுகிறது. என் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை எடுத்துரைக்க எனக்கு வார்த்தைகள் போதவில்லை. ஆகவே எனக்குள் ஏற்படுகின்ற நன்றி பெருக்கை நான் செயலில் காட்டுவேன். ஆர்.கே. நகர் தொகுதி வாழ் மக்களாகிய உங்களுக்காக என் சக்திக்கு உட்பட்ட வரை உழைப்பேன். பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவேன் என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு தெரிவித்து மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய முதல்வர்

ஆர்.கே. நகர் தொகுதியில் நன்றி தெரிவித்தபோது, இரண்டு பெண் குழந்தைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு அவர் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தார். அப்போது, மீனவப் பகுதியான திடீர் நகர் எனும் இடத்தில், ஒரு குழந்தைக்கு “அபர்ணா’ எனப் பெயர் சூட்டினார். இதேபோன்று, தண்டையார்பேட்டையில் ஒரு குழந்தைக்கு “தேவிகா’ எனப் பெயர் சூட்டினார். இரு குழந்தைகளின் உச்சி முகர்ந்து ஆசி வழங்கினார்.

முதல்வர் ஜெயலலிதாவை வழியெங்கும் பொது மக்களும், அதிமுகவினரும் வரவேற்றனர். அவரது இல்லத்தில் இருந்து தொடங்கி ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். சாலையின் இருமருங்கிலும் பொது மக்கள் மலர்களை தூவியும், ஆரத்தி எடுத்தும், பூசணிக்காய்களை உடைத்தும் முதல்வரை வரவேற்றனர். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கோயில்களின் பூர்ண கும்ப மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். மேள-தாளங்கள் முழங்க முதல்வருக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு அளிக்கப்பட்டது.