ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டி

வெள்ளிக்கிழமை, மார்ச் 17, 2017,

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நடந்த ஓபிஎஸ் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷூம் போட்டியிடுகின்றனர்.இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி ஆட்சிமன்றக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்நிலையில் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அவைத் தலைவர் மதுசூதனன் ஆர்.கே.நகர் வெற்றி வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான முடிவு ஆட்சிமன்றக் கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட்டது’ என்றார்.

மதுசூதனன் 1991-ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர். அப்போதைய அதிமுக அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகவும் இருந்தார். 2015, 2016 தேர்தல்களில் ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக மதுசூதனன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.