ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன் உணர்ச்சி பொங்க உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா!

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன் உணர்ச்சி பொங்க உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா!

ஞாயிறு, பெப்ரவரி 28,2016,

ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு  ரூ. 180.41 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா,’ஆர்.கே. நகர் தொகுதியை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன் ” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
“ஆர்.கே. நகர் தொகுதியை என் வாழ்நாள் முழுவதும் நான் மறவேன். இத்தொகுதியைச் சார்ந்த மக்களும் எனது நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கிறீர்கள்.
என்னை தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுத்து, முதல்– அமைச்சராக ஆக்கிய இந்த ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 180 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை, துவக்கி வைத்ததிலும், 193 கோடியே 26 லட்சம்ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதிலும் நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இனிய விழாவில் அம்மா சிறு வணிகக் கடன் உதவித் திட்டம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், திருமண உதவித் திட்டம், நலிந்தோர் உதவித் தொகை மற்றும் முதியோர் உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 707 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், தற்போது நான் துவக்கி வைத்த அடுக்குமாடி குடியிருப்பு வசதித் திட்டத்தின் கீழ் 1,036 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், 63 மாணாக்கர் சேர்க்கைக்கான அனுமதி கடிதம் மற்றும் 800 குடும்பங்களுக்கு அம்மா குடிநீர் திட்ட ஸ்மார்ட் கார்டு ஆகியவையும் இன்று வழங்கப்படுகின்றன.

இவற்றை வழங்கும் அடையாளமாக 14 பயனாளிகளுக்கு நான் இந்த மேடையில் திட்ட உதவிகளை வழங்க உள்ளேன். மற்றவர்களுக்கு அரசு அதிகாரிகள் இன்றே வழங்குவார்கள்.  நலத் திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் இவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.