ஆலந்தூரில் பெண்கள் கலைக்கல்லூரி அமைக்கப்படும் : பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதி

ஆலந்தூரில் பெண்கள் கலைக்கல்லூரி அமைக்கப்படும் : பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதி

திங்கள் , மே 09,2016,

ஆலந்தூர் தொகுதியில் பெண்கள் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். 
ஆலந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று காலை பரங்கிமலை புனித பேட்ரீக் ஆலயம், ஆலந்தூர் புனித அந்தோணியார் ஆலயம், ஆலந்தூர் சி.எஸ்.ஐ. தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்தார்.அப்போது தேர்தலில் தன்னை வெற்றி பெற செய்தால் ஆலந்தூர் தொகுதியில் நிறைவேற்றப்படும் பணிகள் குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:- 
தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் கிடைக்காத குடும்பத்தினருக்கு கிடைக்க ஏற்பாடு செய்வேன். முதியோர், விதவை தாய்மார்களுக்கும் உதவி தொகை தடை இன்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். 
ஆலந்தூர் மண்டலத்தில் மாநகராட்சியின் சொத்து வரி சமநிலைப்படுத்தப்படும். ஆலந்தூர் மண்டலத்தில் மழை காலங்களில் கடும் அவதிக்குள்ளாவதால் புதிய பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்படும். 
பெண்கள் கலைக்கல்லூரி
ஆலந்தூர் தொகுதியில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அமைக்கப்படும். முகலிவாக்கம், நந்தம்பாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்தப்படும். தில்லைகங்கா நகர் பகுதியில் சுரங்கப்பாதையை மேம்பாலமாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 
பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இருந்து நங்கநல்லூர் 5-வது மெயின் ரோட்டுக்கு நேர் சாலை அமைக்கப்படும். கவுல்பஜார்-கெருகம்பாக்கம் இணைப்பு பாலம் அமைக்கப்படும். ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே சுரங்கப்பாதை பணி விரைவுபடுத்தப்படும். 
சென்னை மாநகராட்சியுடன் மூவரசம்பட்டு ஊராட்சியை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை அமைக்கப்படும். தலக்கணாஞ்சேரி கிராமத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு சுடுகாடு அமைக்கப்படும்.
இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் கைத்தொழில் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்படும். மணப்பாக்கத்தில் ராணுவ வளாக பகுதியில் இருந்து சுடுகாடு தனியாக பிரிக்கப்பட்டு தனி பாதை ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் சின்னையா, வி.என்.பி.வெங்கட்ராமன் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.