இடுப்பு எலும்பு இல்லாமல் பிறந்த 9 மாத பெண் குழந்தைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

இடுப்பு எலும்பு இல்லாமல் பிறந்த 9 மாத பெண் குழந்தைக்கு  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

சனி, மார்ச் 05,2016,

ஸ்ரீரங்கத்தில், இடுப்பு எலும்பு இல்லாமல் குறைபாட்டுடன் பிறந்த 9 மாத பெண் குழந்தைக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமி – லாவண்யா தம்பதியினரின் 9 மாத பெண் குழந்தையான பிரியதர்ஷினி, பிறவிலேயே இடுப்பு எலும்பு இல்லாமல் குறைபாட்டுடன் பிறந்தது. குடும்ப வறுமை சூழ்நிலையின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள அவர்களால் முடியவில்லை. இதனால் குழந்தையின் பெற்றோர் மிகவும் கவலையடைந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்து, குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து 3 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, குழந்தையின் வலது இடுப்புப் பகுதியில் பந்து கிண்ணத்துடன், கால் எலும்பு பகுதியை இணைத்து, எலும்புகளை சரியான முறையில் நிலைநிறுத்தினர். இதனால் குழந்தை தற்போது குணமடைந்து வருகிறது.

கட்டணம் ஏதுமின்றி, தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு, குழந்தையின் பெற்றோர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.