இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத அளவில் 26,174 பேர் அ.தி.மு.க சார்பில் விருப்பமனு தாக்கல் செய்து சாதனை

இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத அளவில்  26,174 பேர் அ.தி.மு.க சார்பில் விருப்பமனு தாக்கல் செய்து சாதனை

சனி, பெப்ரவரி 06,2016,

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி, 26 ஆயிரத்து 174 பேர் வேட்பு மனுக்கள் அளித்துள்ளனர். இதில், கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 936 பேர் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தங்களது வேட்பு மனுக்களை 20.1.2016 முதல் 6.2.2016 வரை தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தார்.  அதன்படி, நேற்று வரை 26,174 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், கழகப் பொதுச் செயலாளரும், முதல்வர் ஜெயலலிதாவும் தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ் நாட்டில் 7,936 வேட்பு மனுக்களை கழக உடன்பிறப்புகள் சமர்ப்பித்துள்ளனர்.

கழகப் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தங்கள் தொகுதியிலும், இன்ன பிற தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று இளைஞர்கள், இளம் பெண்கள், மகளிர் என ஆர்வத்துடன் 7,936 கழக உடன்பிறப்புகள் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர் என்பது எந்த ஓர் அரசியல் இயக்கத்திலும் இதுவரை நடைபெற்றிடாத வியப்புக்குரிய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் ஏராளமான கழக உடன்பிறப்புகள், முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர் என்பது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய தலைமையின் கீழ் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

கழக உடன்பிறப்புகள், தாங்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்புகோரி, தமிழ்நாட்டில் 17,698 வேட்பு மனுக்களையும், புதுச்சேரி மாநிலத்தில் 332 வேட்பு மனுக்களையும், கேரள மாநிலத்தில் 208 வேட்பு மனுக்களையும் அளித்துள்ளனர்.  தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி மொத்தம் 26,174 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.  இதன் மூலம் வேட்பு மனுக் கட்டணமாக 28 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.