இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தில் தமிழகம் பெரும்பங்கு வகிப்பதாக மத்திய தொழில்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் பாராட்டு

இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தில் தமிழகம் பெரும்பங்கு வகிப்பதாக மத்திய தொழில்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் பாராட்டு

செவ்வாய், டிசம்பர் 01,2015,

இந்தியாவிலேயே அதிகமாக 36 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தமிழகத்தில் செயல்படுவதாகவும், அவை இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிப்பதாகவும் மத்திய அரசு பாராட்டியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமான பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், இந்திய அளவில் தற்சமயம் 204 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சிறப்புடன் செயல்படுவதாகவும், அவற்றில் பணியாற்றும் சுமார் 15 லட்சம் ஊழியர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில், 25 சதவீத அளவிற்கு பங்களிப்பு செய்கின்றன எனவும் தெரிவித்தார். குறிப்பாக தமிழகத்தில், இந்தியாவிலேயே அதிகமாக 36 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்படுவதாகவும், அவை இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிப்பதாகவும் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.

சிறப்பாக செயல்படும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு, மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கி வருவதால், அவற்றின் செயல்பாட்டில் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், அகில இந்திய அளவில் இன்னும் செயல்படாமல் இருக்கும் 225 சிறப்பு பொருளாதார மண்டலங்களும் செயல்படத் தொடங்கினால், சர்வதேசச் சந்தையில், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.