இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

செவ்வாய், பெப்ரவரி 09,2016,

இந்தியாவிலேயே முதன் முறையாக விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைசெயலகத்தில் அவசர கால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்கள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் கடற்கரை சாலை மற்றும் தலைமை செயலகம் எதிரில் அலங்கார பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தலைமை செயலக வாசலில் வாழை மரங்கள் கட்டப்பட்டு, பேண்டு வாத்தியங்கள் இசைத்து முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலுக்கு காலை 11.40 மணிக்கு முதல்-அமைச்சர் வந்தார். அவரை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் வரவேற்பு அளித்தனர். பச்சைகொடியை அசைத்து திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘108’ அவசரகால சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவசரகால முதலுதவிக்காக ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 41 இருசக்கர வாகனங்களின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களில், 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 இருசக்கர வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடவர் மட்டுமின்றி, பெண் அவசரகால மருத்துவ உதவியாளரும் இயக்கும் வண்ணம் இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இயக்கப்படும் அவசரகால முதலுதவிக்கான ஸ்கூட்டர் வடிவிலான இருசக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு, முதல் 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த முதல் 10 நிமிடங்களில் பாதிப்பின் தன்மையை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதியை அசையாமல் செய்து உயிர் மீட்பு, உயிர் வாயு வழங்குவது, ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது போன்ற முதலுதவிகள் பாதிப்பின் தன்மையை குறைத்து, உயிர் காக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

விபத்து பகுதிகளுக்கு ‘108’ அவசரகால ஊர்திகள் செல்வதற்கு முன்பு, பாதிப்புக்குள்ளானவருக்கு உடனடியாக தரமான முதலுதவி கிடைக்க இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் வழிவகை செய்யும். இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதற்கான கால அளவு மேலும் குறையும்.

இந்த இருசக்கர முதலுதவி வாகனத்தில், கையில் எடுத்து செல்லக்கூடிய உயிர் வாயு சிலிண்டர், நாடித்துடிப்பை கண்டறியும் கருவி, ரத்த அழுத்தத்தை அறியும் கருவி, ரத்தத்தில் சர்க்கரை அளவை அறியும் கருவி, உடல் சூட்டை அறியும் கருவி போன்ற உயிர் காக்கும் கருவிகளும் தேவையான மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த இருசக்கர வாகனத்தை பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ உதவியாளர் ஓட்டுவார். அவசர ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி தன்மையுடன் கூடிய வண்ணத்தில் இவ்வாகனங்கள் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவசரகால அழைப்பு, ‘108’ அவசர கட்டுப்பாடு அறைக்கு வந்தவுடன், பாதிப்பின் தன்மைக்கேற்ப இந்த இருசக்கர வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு, பாதிப்பின் தன்மையை ஆய்வு செய்து முதலுதவி வழங்கப்படும். பாதிப்பின் தன்மை அதிகமாகவும், மருத்துவமனையில் உடனடி சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் இருப்பின், ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்.

இந்த அவசரகால இருசக்கர வாகனம், முதல் கட்டமாக சென்னை மாநகரத்தில் முக்கிய சந்திப்புகள், குறுகிய மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்திவைக்கப்படுகிறது. பகல் பொழுதில் போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் இயக்கப்படும்.

இவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து, இந்தத் திட்டம் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த சிறப்பு சேவை மூலம், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.