இன்று அ.தி.மு.க. செயற்குழு கூடுகிறது : முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்

இன்று அ.தி.மு.க. செயற்குழு கூடுகிறது : முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்

சனி, ஜூன் 18,2016,

சென்னை, அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலை அ.தி.மு.க செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

தமிழக சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற்றது. இதனையடுத்து அ.தி.மு.க பொதுசெயலாளர் ஜெயலலிதா 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து 32 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். முதல்வராக பொறுப்பேற்ற முதல்நாளே சட்டமன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி ஐந்து கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 500 மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 100 யூனிட் வரை இலவச மின்சாரத்திற்கும் வழிவகை செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கட்சியிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்களும். அமைப்பு செயலாளர்களும், புதிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அ.தி.மு.க செயற்குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழுக்கூட்டத்தில் அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பங்கேற்கிறார்.

முதல்வர் ஜெயலலிதாவின் பெருமுயற்சி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அ.தி.மு.க.வின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்தித்து தமிழக மக்களின் நலன்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து நேரில் வலியுறுத்தினார். இது தேசிய அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க செயற்குழு இன்று சென்னையில் கூட இருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.  அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை வரவேற்க கட்சியினர் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.