இன்று முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் : பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன

இன்று முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் : பல்வேறு     நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன

புதன், பெப்ரவரி 24,2016,

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு, அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆலயங்களில், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் மருத்துவமுகாம்கள் மற்றும் விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றன.

முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் ஓட்டுனர் அணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தள்ளு வண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நேற்று முன்தினம், சென்னை காளிகாம்பாள் கோவிலில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வருக்காக வெள்ளி தேர் இழுத்து வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டார். திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் தங்க தேர் இழுத்து அ.தி.மு.க.வினர் வழிபட்டனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலத்திட்ட  உதவிகளை சின்னசாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாச்சலேச்சுவரர் ஆலயத்தில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 29 அடி உயர தங்கத்தேர் இழுக்கப்பட்டது. இதில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பங்கேற்று தங்கத்தேர் இழுத்தார்.  காஞ்சிபுரத்தில் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏழை எளிய மக்கள் 3ஆயிரத்து 68பேருக்கு சைக்கிள்கள் இஸ்திரி பெட்டி, தையல் எந்திரங்கள், வேட்டி,சேலைகளை அமைச்சர் டி.கே.எம். சின்னையா வழங்கினார். இதில் ஜெயவர்தன் எம்.பி. கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். தோவாளையில் நடந்த திருவிளக்கு பூஜையில் 68 பெண்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தளவாய் சுந்தரம், பச்சை மால் எம்.எல்.ஏ. கலந்துகொண்டனர்.
நெல்லை புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஆயிரத்து 68பேர் பால் குடம் எடுத்தனர். இதில் முருகையா பாண்டியன் கலந்து கொண்டார்.

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் 10ஆயிரம் பெண்கள் பங்கேற்ற பால் குட ஊர்வலம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா பெயரில் சண்முகா அர்ச்சனை நடந்தது. தங்கத்தேரும் இழுக்கப்பட்டது. 25ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் விசுவநாதன் தொடங்கி வைத்தார்.இதில் மேயர் ராஜன் செல்லப்பா, கோபால கிருஷ்ணன் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

சென்னை கோடம் பாக்கத்தில் நடந்த மருத்துவமுகாமில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். ஷெனாய் நகரில் நடந்த மருத்துவமுகாமில்  68வகையான சிகிச்சைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டன.  தென் சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் வளர்மதி பங்கேற்றார்.

குமரி மாவட்டம் தக்கலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள 6868 திருக்கோவில்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறுகிறது. முதல்வருக்கு தகவல் தொழில் நுட்பத்துறையின் ஏற்பாட்டின் பேரில் இதுவரை 6லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தொடர்ந்து அவருக்கு தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.தமிழகம் முழுவதும் இன்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. சென்னையில் 68கிலோ எடை உள்ள கேக் வெட்டி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தங்கத்தேர் இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.