இயற்கைப் பேரிடர் நிகழ்வில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள்:செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது குறித்து, தமிழக அரசு, அனைத்து ஆதாரங்களுடன் விளக்கம்

இயற்கைப் பேரிடர் நிகழ்வில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள்:செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது குறித்து, தமிழக அரசு, அனைத்து ஆதாரங்களுடன் விளக்கம்

திங்கள் , டிசம்பர் 14,2015,

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், தமிழகம் கடந்த நான்கரை ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதையில் வேகமாக நடைபோட்டு வரும் நிலையில், தமிழக அரசிடம் குறைகாண முடியாத எதிர்க்கட்சிகள், தற்போது இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளைப் பயன்படுத்தி, அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம், அரசியல் ஆதாயம் தேட முனைந்துள்ளன. இதன் உச்சகட்டமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது குறித்து அப்பட்டமான பொய்களை கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். இவை முற்றிலும் உண்மைக்கு மாறானவை என அம்பலப்படுத்தும் வகையில், தமிழக அரசு, அனைத்து ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே, முதலமைச்சர் ஜெயலலிதா, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அனைத்துத் துறை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை அழைத்துப் பேசியதன் அடிப்படையில், அரசு இயந்திரம் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கனமழையின்போது, மக்களை பாதுகாக்க அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக, உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையினால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்களை காப்பாற்ற முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர். திரு. நரேந்திர மோடி, உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் மேல் குறைகள் எதனையும் கண்டு பிடிக்க முடியாத எதிர்கட்சிகள், தற்போது இயற்கை பேரிடர் நிகழ்வுகளைப் பயன்படுத்தி பொய்களையும், தவறான தகவல்களையும் கூறி வருவதுடன், தங்கள் சுயநலத்திற்காக இதனை அரசியலாக்கி வருகின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பிரதான ஏரிகள் பாதுகாக்கப்பட்டு, கரைகள் மண் மூட்டைகளைக் கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டதாக ஒரு ஆதாரமற்ற செய்தியை கருணாநிதி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். இத்தகவலை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரு லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதாக சில உதிரி கட்சியினர் கூறி வரும் தகவல் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில், உண்மைநிலையை ஆதாரத்துடன் நீர்வள ஆதாரத்துறை விளக்கியுள்ளது.

கனமழை அதிகம் இருந்த டிசம்பர் 1-ம் தேதியன்று, செம்பரம்பாக்கம் ஏரியில் அதன் முழு நீர்மட்ட அளவான 24 அடியில், காலை 6 மணிக்கு 22.08 அடி நீர் இருந்தது. நீர்மட்டத்தின் முழுமையான அளவைக் காட்டிலும் 2 அடிக்கு குறைவாக உள்ள நிலையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம். இந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 1-ம் தேதி காலை 6 மணிக்கு ஏரியின் நீர்மட்டம் 22.8 அடியாக இருந்தபோது, ஏரியில் இருந்து 900 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது.

ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்றவாறும், நீர் வரத்துக்கு ஏற்றவாறும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதிக பட்சமாக அன்று நள்ளிரவு 12 மணி அளவில் 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, கடந்த 2-ம் தேதி மாலை 6 மணி அளவில் அதிகபட்சமாக 15 ஆயிரம் கனஅடி மட்டுமே வெளியேற்றப்பட்டதாக நீர்வள ஆதாரத்துறையின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் திரு. வ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது குறித்து, பொதுப்பணித் துறையினரிடம் இருந்து தகவல் கிடைத்தவுடன், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அடையாறு ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறுவதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட விவரங்கள் குறித்து ஒவ்வொரு கட்டத்திலும் செய்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும், உடனுக்குடன் அரசுத் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. நிலைமை இப்படி இருக்க, பேரிடர் பாதிப்பிலும் மனிதநேயமின்றி, ஆதாரமற்ற தகவல்களை அரசியல் ஆதாயத்திற்காக கருணாநிதி உள்ளிட்டோர் வெளியிட்டு வருகின்றனர். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிர்வாகம் எப்படி இருந்தது என்பதை நன்கு அறிந்துள்ள பொதுமக்கள், தற்போது செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பு தொடர்பாக, கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோர் அவிழ்த்து விடும் பொய்களை யாரும் நம்பமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.