இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் :தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வலியுறுத்தல்

இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் :தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, மார்ச் 16, 2017,

புதுடெல்லி : தலைமை தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அ.தி.மு.க. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் டெல்லி வந்தார்.மதியம் 12 மணி அளவில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதி, கமி‌ஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோரை அவர் சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், செம்மலை, டாக்டர் மைத்ரேயன், சுந்தரம், அசோக்குமார் என 9 பேர் கொண்ட குழுவினரும் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பாலாஜி சீனிவாசனும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது கீழ்கண்ட கோரிக்கைகளை தலைமை தேர்தல் கமி‌ஷன் முன்பு வைத்ததாக பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அதன் விவர வருமாறு:–

1. பொதுச்செயலாளர்(ஜெயலலிதா) மறைந்தநிலையில், அந்த பதவிக்கு சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கட்சியின் விதிகளில் உள்ளது. அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்கள் மூலம்தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்தல் பற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, போட்டி இருந்தால் தேர்தல் நடைபெறும். போட்டி இல்லை என்றால் ஒரு மனதாக பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார். அந்த வழியில்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பொதுச் செயலாளராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு போதும் இதனை அவர்கள் மாற்றியது இல்லை. சட்ட திட்ட விதியில் இதனை யாராலும் எக்காலத்திலும் மாற்ற முடியாது.

ஆனால் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி மீண்டும் சேர்த்து 5 ஆண்டுகள் இன்னும் முழுமையாக பூர்த்தியாகவில்லை. எனவே அவர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

 2. தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பே கட்சியில் கிடையாது. அந்த வகையில் பொதுக்குழு கூடி பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது கட்சி சட்டவிதிகளில் இல்லை. எனவே சசிகலா தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக்கூடாது. பொதுச்செயலாளருக்கு அடுத்ததாக அவைத்தலைவர், பொருளாளர் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். ஆகவே எங்கள் அணிக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

3. சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலுக்கு முன்பாகவே அறிவிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்துக்காக யாருக்காவது அவர் கையெழுத்திட்டு கொடுத்து இருந்தால் அதை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொள்ளக்கூடாது.  

4. அ.தி.மு.க. கட்சி நிர்வாக தேர்தலை தேர்தல் கமி‌ஷனே தங்கள் பார்வையாளரை நியமித்து முறைப்படி நடத்தி உட்கட்சி ஜனநாயகத்துக்கு வழிவகுக்கவேண்டும்.

இவ்வாறு அவற்றில் கூறப்பட்டு இருந்தது.

தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:–

அ.தி.மு.க.வின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரால் இந்த மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவால் இந்த இயக்கத்தில் 28 ஆண்டுகள் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று ஒன்றரை கோடிக்கும் மேலான தூய தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக  அ.தி.மு.க.வை வளர்த்து இருக்கிறார். எங்கள் தலைவி காலமாகி விட்ட இந்த சூழ்நிலையில் கழகத்தின் சட்ட விதிப்படி கழகத்தின் பொதுச்செயலாளர் என்பவர் தேர்தல் மூலமாகத்தான் கழகத்தின் அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

இதற்கு மாறாக கழகத்தின் பொதுக்குழுவால் நியமனம் செய்யப்பட்ட ஒருவர் பொதுச்செயலாளர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு செயல்படுகிற நடைமுறை முற்றிலும் தவறானது. இது கழக சட்டவிதிக்கு புறம்பானது என்பதை இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷன் முன்பு விளக்கமாக எடுத்துக் கூறினோம்.

அவர்களும் எங்களுடைய வாதங்களை கவனமாக கேட்டார்கள். இந்த சூழ்நிலையில் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. கழக சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் எப்படி கழக பொதுச் செயலாளராக செயல்பட முடியும்? முடியாது. அதற்கு இடம் தரக்கூடாது என்பதுதான் எங்கள் முக்கிய வாதமாக இருந்தது.

எனவே, சசிகலா முறைப்படியான கழக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கிற சூழ்நிலையில் அவர் எந்த அதிகாரமும் படைத்தவர் அல்ல. புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. மறைந்த ஜெயலலிதாவால் முன்பு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களை நீக்குவதற்கும் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற கழகத்தின் சட்டவிதிகளை எடுத்துக் கூறி இருக்கிறோம். அவர்கள் எங்கள் நியாயமான வேண்டுகோளை கேட்டுக் கொண்டார்கள். ஆவன செய்வதாக கூறினார்கள்.கழக பொதுவிதி என்ன சொல்கிறது என்றால் அசாதாரண நிலையில் பொதுச்செயலாளரின் இடம் காலியாக இருந்தால் அந்த பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைமை கழக நிர்வாகிகள் கழக பணிகளை கவனிப்பார்கள் என்று விதி இருக்கிறது.

கழக விதிப்படி கழகத்தின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே கட்சியின் சின்னம் கேட்கும் உரிமை உண்டு. சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை. அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நிர்வாகிக்குத்தான் பணியாற்ற சட்ட விதிகளில் இடம் இருக்கிறது. அதன்படி எங்கள் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த வி‌ஷயத்துக்கு நாங்கள் தேர்தல் ஆணையத்தில் அழுத்தம் கொடுத்து பேசினோம்.

2011–ல் அந்த குடும்பத்தின் மீது எங்கள் பொதுச்செயலாளர் அம்மா எது போன்ற நடவடிக்கை எடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்ததும் மீண்டும் சேர்த்துக்கொண்டார். அதுவும் அந்த கடிதத்தில் சசிகலா நான் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன் தலையிட மாட்டேன். அரசு பதவியிலோ கட்சி பதவியிலோ வரமாட்டேன் என்று சொன்னதால்தான் அம்மா அவரை மீண்டும் தனக்கு உதவியாக மட்டுமே சேர்த்துக் கொண்டார்.

அவரோடு சேர்த்து நீக்கப்பட்ட யாரையும் அம்மா தான் உயிரோடு இருந்த வரையில் யாரையும் உள்ளே சேர்க்கவில்லை என்பது சமீபத்திய வரலாறு. இது அனைவருக்கும் தெரியும்.குடும்ப அரசியல் வேண்டாம் என்று சொல்கிறோம். ஆனால் தினகரனை இப்போது வேட்பாளராக அறிவித்து உள்ளதால் மீண்டும் மீண்டும் அவர்கள் தங்கள் குடும்ப அரசியல் நிலைப்பாட்டை நிரூபித்து வருகின்றனர்.எங்களுடைய கோரிக்கைகள் குறித்து நல்ல முடிவை தேர்தல் கமி‌ஷனிடம் இருந்து எதிர்நோக்கி இருக்கிறோம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் யாரை நிறுத்தப் போகிறோம் என்பதை ஓரிரு நாட்களில் அறிவித்து விடுவோம். கூட்டணி வி‌ஷயமாக நிறைய நண்பர்கள் பேசி வருகின்றனர். எங்கள் அணியின் ஆட்சி மன்றக்குழு இது பற்றி விவாதித்து வருகிறது. விரைவில் வேட்பாளரை அறிவிப்போம்.

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.