இரண்டு நாள் பொறுத்திருங்கள் மக்கள் தீர்ப்பு தெரியும் : வாக்களித்த பின் முதல்வர் ஜெயலலிதா பேட்டி

இரண்டு  நாள் பொறுத்திருங்கள் மக்கள் தீர்ப்பு தெரியும் : வாக்களித்த பின் முதல்வர் ஜெயலலிதா பேட்டி

செவ்வாய், மே 17,2016,

இன்னும் 2 நாள் பொறுத்திருங்கள் மக்கள் தீர்ப்பு தெரியும் என்று வாக்களித்த பின் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் முதல்வர் ஜெயலலிதா தனது வாக்கை செலுத்தினார். வாக்களித்தப்பின் அவர் நிருபர்களிடம் பேசுகையில்., இன்னும் 2 நாள் பொறுத்திருங்கள். மக்கள் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும் என்று அவர் கூறினார்.

தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா வீடு போயஸ் தோட்டம் பகுதி ஆயிரம்விளக்கு தொகுதியில் உள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அமைச்சர் பா.வளர்மதி போட்டியிடுகிறார். கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில்முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓட்டு உள்ளது. எனவே வாக்களிப்பதற்காக இந்த வாக்குச்சாவடிக்கு காலை 9.55 மணிக்கு  ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரிக்கு வந்தார். கல்லூரி வாசலில் அவரை சமூகநலத்துறை அமைச்சரும், அ.தி.மு.க இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

வாக்குச்சாவடிக்குள் முதல்வர் ஜெயலலிதா சென்றார். வாக்குப்பதிவு செய்வதற்கான புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் அவருக்கு இடதுகை விரலில்அழியாத மை வைக்கப்பட்டது. பின்னர் மின்னணு இயந்திரத்தில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு புறப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா காரில் ஏறுவதற்கு முன்பு அங்கு திரண்டிருந்த ஏராளமான பத்திரிகை நிருபர்களும், ஊடக நிருபர்களும் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று கருத்து கேட்டனர். அதற்கு முதல்வர் ஜெயலலிதா சிரித்து கொண்டே இவ்வளவு நாட்கள் பொறுத்திருந்தீர்கள். இன்னும் 2 நாள் பொறுத்திருங்கள். அனைவருக்கும் மக்கள் தீர்ப்பு என்ன என்பது தெரியும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.